கரூர்: சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், தேர்தல் பரப்புரையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறான பாடல் ஒன்றை பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறைக்குச் சவால் விடும் வகையில், "சாட்டை துரைமுருகன் பாடிய பாடலை தானம் பாடுகிறேன்.. முடிந்தால் கைது செய்து பாருங்கள்" எனப் பாடிய சம்பவம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தார்.
தொடர்ந்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இந்த நிலையில், தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் வழங்கிய புகார் குறித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் மனுவினை தான்தோன்றி மலை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அதனால், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் முன்னரே சைபர் கிரைம் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்