கரூர்: கரூர் மாவட்டத்தில் மண்மங்கலம் தாலுகா பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது 100 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை போலி பத்திரம் மூலம் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அபகரிக்க முயன்றதாக நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்டம் சார் பதிவாளரிடமும் புகார் அளிக்கப்பட்டதின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், 100 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தின் தாய் பத்திரம் தொலைந்து விட்டதாகவும், அதற்காக காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர் வாங்கி அதன் மூலம் அந்த நிலத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வாழ்க்கை தீவிரமாக விசாரணை செய்ய சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு சிபிசிஐடி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடந்த சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், விஜயபாஸ்கர் தலைமறைவானதாக தகவல் வெளியாகியது. சிபிசிஐடி போலீசார் அவரை சுமார் 15 நாட்களாக தேடி வந்தனர். மேலும், தலைமறைவான் எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில், கரூர் முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கரூர் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம், விஜயபாஸ்கர் தரப்பில் ஜாமீன் கேட்டு வழங்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவாக இருந்த அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று கேரளாவில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
பின்னர், கரூர் காந்திகிராமம் திண்ணப்பா நகரில், உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு, எம்.ஆர்.விஜயபாஸ்கரை விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்
இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்ததை விட மோசமாக நடக்கும்" - திமுக நிர்வாகிக்கு வந்த கொலை மிரட்டல்!