கட்சித் தலைவராக விஜய்? - ஆலோசனையில் ஒருமனதாக தேர்வு! - Vijay consultation meeting
Actor Vijay political party: விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்வது எனவும், கட்சியின் தலைவராக விஜய் ஏகமனதாக தேர்தெடுத்துள்ளதாகவும் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published : Jan 26, 2024, 1:43 PM IST
|Updated : Jan 26, 2024, 2:47 PM IST
சென்னை: நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை, மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சினிமாவில் தற்போது உச்ச நடிகராக இருந்தாலும் அரசியல் ஆர்வம் காரணமாக, சமீப காலங்களில் தனது மக்கள் இயக்கத்தினை அரசியல் நகர்வை நோக்கி நகர்த்தி வருகிறார். அதன்படி, மக்கள் ஏராளமான நலத்திட்டங்களையும் செய்து வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நேற்று (ஜன.25) சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில், நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நடிகர் விஜய் அரசியல் குறித்து நிர்வாகிகளிடம் திட்டவட்டமாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு மாத காலத்திற்குள் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனையின் போது முதலில் அரசியல் கட்சியாக பதிவு செய்த பின்னர், யாருக்கு ஆதரவு கொடுக்கலாம் அல்லது தனித்து போட்டியிடலாமா என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிய கட்சி துவங்க ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளிடம் கையொப்பம் பெறப்பட்டுள்ளது.
இதனிடையே விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்வது எனவும், கட்சியின் தலைவராக விஜய் ஏகமனதாக தேர்தெடுத்துள்ளதாகவும், பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிற நிர்வாகிகளை தேர்வு செய்து ஒப்புதல் அளிக்க கையொப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சட்ட விதிகளோடு கட்சி பதிவு செய்ய ஒப்புதல் அளிக்க, நிறைவு கையொப்பம் நிர்வாகிகளிடம் பெறப்பட்டதாகவும், தேர்தல் குறித்தான தலைவர் முடிவிற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட தலைவருக்கும் ஒரு பத்திரம் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவால் காலமானார்..