சென்னை: சென்னை, பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் விநாயகா நகர் மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஞானமணி. இவர் பொழிச்சலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார். இவரது மகன் சரவணன் (35) மாற்றுத் திறனாளி ஆவார். இந்த நிலையில், சரவணன் கடந்த சனிக்கிழமை அன்று பொழிச்சலூர் பகுதியில் உள்ள அகத்தீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பிறகு கோயிலில் உள்ள பூசாரி அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா தயாளனின் மகன் தினேஷ் பாபு இருந்துள்ளார். ஏற்கனவே தினேஷ் பாபுவுக்கும், சரவணனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளதால் அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், தினேஷ் பாபு சரவணனை பார்த்து, '' நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என சாதி பெயரை கூறி, கன்னத்தில் அறைந்து உள்ளார். மேலும் சரவணன் அவரை தனது வாக்கிங் ஸ்டிக்கால் தாக்க முன்ற போது, கீழே விழுந்த தினேஷ் பாபுவிற்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாற்று திறனாளி சரவணன் அங்கிருந்து புறப்பட முயன்ற போது, தினேஷ் பாபு அவரை துரத்திச் சென்று அடித்து எட்டி உதைத்துள்ளார். இதில் நிலை தடுமாறி சரவணன் கீழே விழுந்து உள்ளார். பின்னர் கோவிலில் இருந்த நபர்கள் சரவணனை மீட்டு அனுப்பி வைத்ததாக பாதிக்கப்பட்ட சரவணன் கூறுகிறார்.
இதையும் படிங்க: "தமிழக பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்" - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
மருத்துவமனையில் களேபரம்
பின்னர் மாற்றுத்திறனாளி சரவணன் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது மகன் தினேஷ் பாபுவின் நண்பர்கள் சரவணனை மிரட்டி உனக்கு இங்கே சிகிச்சை அளிக்க முடியாது என கூறி விரட்டியுள்ளனர்.
இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக மாற்றுத்திறனாளி சரவணன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் மகன் தினேஷ் பாபு மீது வழக்கு பதிவு செய்தனர். இத்தகவலை அறிந்த தினேஷ் பாபு தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலில் செய்யப்படும் பணிகளை அரசு அதிகாரிகள் செய்யாமல், உள்ளூர் நபர்களுக்கு ஒதுக்குவதால் அதில் ஏற்படும் போட்டி காரணமாகவே இத்தகைய மோதல் ஏற்பட காரணமாக இருந்ததாக பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளி அளித்த விவரம்
இது தொடர்பாக மாற்றுத்திறனாளி சரவணன் கூறுகையில், '' நான் கடந்த சனிக்கிழமை அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு கோவில் பூசாரி உடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு இருந்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் மகன் தினேஷ் பாபு நீங்கள் எல்லாம் எதற்கு கோவிலுக்குள் வருகிறீர்கள் என சாதி பெயரை கூறி என்னை தாக்கினார்.
இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தால் எனக்கு சிகிச்சை எதுவும் அளிக்காமல் தினேஷ் பாபுவுக்கு மட்டும் சிகிச்சை அளித்தனர். மேலும், அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டி அங்கிருந்து விரட்டினர்.
தினேஷ் பாபுவின் தாய் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதால், கோவில் நிர்வாகத்தில் தலையிட்டு பட்டியலிட சமூகத்தை கோவிலுக்குள் வரவிடாமல் தடுக்கும் நோக்கில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என இவ்வாறு கூறினார். மேலும், மாற்றுத்திறனாளி சரவணனை கோவிலுக்குள் தினேஷ் பாபு தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.