சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள பகுதியில், மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ் இலக்கியம், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், வாசகர்கள் இங்கே அமர்ந்து படிப்பதற்குத் தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ளவும், இந்த நூலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நூலக கட்டடத்தின் வெளிப்புறப் பகுதி சிதிலமடைந்து இருந்த காரணத்தினால், அதனை பராமரித்திட தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, மாணவ, மாணவியர் மர நிழலில் அமர்ந்து போட்டித் தேர்வுக்கு படித்தும் வருகின்றனர். இந்த நிலையில், நிழல் தரும் வகையில் இருந்த பல ஆண்டுகள் பழமையான மரங்களை ஒப்பந்ததார், நூலகர் அனுமதியின்றியும், வருவாய்த்துறை அனுமதி இன்றியும் வெட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து நூலக வளாகத்திற்கு வந்த சமூக ஆர்வலர் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன், “மரங்களை வெட்ட முறையாக அனுமதி பெறப்பட்டதா, நூலக வளாகத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை மரப்பதிவேடு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறதா” என்று நூலக ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, “அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒப்பந்ததாரர் தான் இது போல் செய்துவிட்டார்” என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையிடம் அவர் புகார் தெரிவித்தார். அதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், ஒப்பந்ததாரர் மீது கிராம நிர்வாக அலுவலர் (VAO) மூலம் புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன், “அரசுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள மரங்களைப் பராமரித்து, அவற்றை மரப் பதிவேடு மூலம் தணிக்கை செய்து வைத்திருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு இங்கு செய்யாமல் மரங்களை வெட்டி உள்ளனர். மரங்களை வெட்டியது குறித்து நூலகர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. சேலம் மைய நூலகம் தற்போது பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் இந்த பணி செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. ஆனால், ஒப்பந்ததாரர் எந்த அரசு அலுவலரிடமும் தகவல் தெரிவிக்காமல் மரத்தை வெட்டியுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் 166 பிரிவின் கீழ், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுச்சொத்தை அழித்து சேதப்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை மற்றும் காவல்துறையிடம் முறையிட்டு உள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், அவர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் தனியார் மாலுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்! - Bomb Threat To Mall In Chennai