திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 4வது நடைமேடையில் நேற்று முன்தினம், இளைஞர் ஒருவர் திடீரென ரயில் தண்டவாளப் பாதையில் இறங்கி, தானாபூரிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
பின் இதுகுறித்த தகவல் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இறந்தவர் அசாம் மாநிலம், கர்பி ஆங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்த பித்து ஜித் என்பவரின் மகன் பவான்ஜித் (28) என்பது தெரிய வந்தது.
மேலும், வறுமையின் காரணமாக இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான அசாம் மாநிலத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வந்த போது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். மனக்கவலையில் திடீரென சங்கமித்ரா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து ரயில்வே போலீசார் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். வறுமையின் காரணமாக, வசதி வாய்ப்பு இல்லாததால் பவான்ஜித்தின் உறவினர்கள் அவரது உடலைப் பெற வர முடியாத சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் பவான்ஜித்தின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அப்படி இல்லையென்றால், அவரது உடலை அடக்கம் செய்ய ரயில்வே போலீசாரே ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலரான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் முல்லை கமலேஷ் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாப்பிட்டு காசு கொடுக்க மறுத்த நபர்.. பட்டா கத்தியுடன் கோதாவில் குதித்த ஹோட்டல் உரிமையாளரின் மகன்! - Hotel Attack In Tiruvarur