திருநெல்வேலி: சென்னை ஜே.எம் ஃப்ரிக்டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண்பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கண் கண்ணாடிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த கண் கண்ணாடிகள் மூலம் கண் பார்வை குன்றிய நபர்கள் அருகில் உள்ள நபர்கள் யார்? அருகில் உள்ள பொருட்கள் என்ன? என்பது குறித்தான தகவல்களை எளிதில் பெரும் வகையில் இந்த கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஜே.எம் ஃப்ரிக்டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சாந்தி, “இந்த செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கண்ணாடிகளில் உள்ள சேமிப்புகள் மூலம் தங்களுக்கு தெரிந்த நபர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களது குரல்களை சேமித்து வைக்க முடியும். அதன் மூலம் எதிரே வரக்கூடிய நபர்கள் யார் என்ன என்பது குறித்தான தகவல்கள் ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகளில், உள்ள ஸ்பீக்கர்கள் மூலம் பார்வை திறன் குன்றிய நபர்களுக்கு எளிதில் தெரியப்படுத்தலாம்.
மேலும் பல்வேறு வகையான பொருட்கள், புத்தகங்கள் போன்ற தரவுகளையும், ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகளில் தரவுகளாக சேகரித்து வைத்துள்ளனர். அதன் மூலமாக அவர்கள் எளிதில் அருகில் உள்ள பொருட்களை கண்டறிவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவுத்திறன் கொண்ட, ஒரு கண்ணாடி ரூபாய் 35 ஆயிரம் வரை வெளியே விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஸ்மார்ட் விஷன் கண் கண்ணாடிகள் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, ஜீவன் அறக்கட்டளை மற்றும் ஜே எம் ஃப்ரிக்டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் நெல்லையில் உள்ள கண் பார்வையற்ற மாற்றத்திறனாளிகள் 57 பேருக்கு இன்று இலவசமாக வழங்கப்பட்டது” என்றார். இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கண் மருத்துவமனையில் ஆலோசகர் மருத்துவர். ராமகிருஷ்ணன் மற்றும் தலைமை மருத்துவர் மீனாட்சி ஆகியோர் கலந்துகொண்டு கண்ணாடிகளை இலவசமாக வழங்கினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நீரிழிவு நோய்: கால்களை பரிசோதிப்பது அவசியம்.. டாக்டர் அட்வைஸ்!