சென்னை: சென்னை, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சதாசிவம் (31) என்பவரின் வீட்டின் அருகில் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் கணேசன் (24), ஆனந்தராஜ் மகன் கார்த்திகேயன் (19) மற்றும் வினோத்(22) ஆகிய மூன்று பேரும் சத்தமிட்டு பேசிக் கொண்டிருந்த போது, சதாசிவம் மேற்கண்ட நபர்களிடம் வீட்டின் அருகில் நின்று கொண்டு சத்தமாக நீங்க பேச வேண்டாம் உடனடியாக இங்கிருந்து கிளம்புமாறு கூறி உள்ளார்.
இதனால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட மூன்று பேரும், சதாசிவத்தை கத்தியை காட்டி மிரட்டி விட்டு இருசக்கர வாகனம் மூலம் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சதாசிவம் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சதாசிவம் சகோதரர் செல்வம் (40), பாலகிருஷ்ணன் மகன் வேலு (36), ஆறுமுகம் மகன் பாலகிருஷ்ணன் (65), சவரன் ராஜ் மகன் பிரிட்டோ (எ) பீட்டர் (44), பலராமன் மகன் அன்பழகன் (37) மற்றும் சதாசிவம் ஆகிய ஆறு நபர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற மூன்று நபர்களை மடக்கிப் பிடித்தனர்.
இந்நிலையில் இரு தரப்பினருக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட அது தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், எதிர் தரப்பில், திருவேற்காடு பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சதாசிவம் தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டன.
இந்த தகவல் திருமுல்லைவாயில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த கணேசன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சதாசிவம் உள்ளிட்ட 6 நபர்களை ஆறு மணி நேரத்தில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், எதிர் தரப்பைச் சேர்ந்த காயங்களுடன் சிகிச்சைக்காக கார்த்திகேயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத் என்பவர் தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஈஷா மின் தகன மேடை விவகாரம்: ஈஷா ஆதரவாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! - Isha Yoga Crematorium Issue