சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நகர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிதமான கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவிலிருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது.
தற்போது, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மோசமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு விமானங்கள் 3, வருகை விமானங்கள் 3 என மொத்தம் ஆறு விமானங்கள் இன்று (டிசம்பர் 12) ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் சென்னை விமான நிலையம் தரப்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில், சென்னையில் இருந்து இன்று காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் விமானம், பகல் 12.35 மணிக்கு சிலிகுரி செல்லும் பயணிகள் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்லும் பயணிகள் விமானம் ஆகிய மூன்று புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, பகல் 1.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் விமானம், மாலை 6.10 மணிக்கு சிலி குரியிலிருந்து சென்னை வரும் விமானம், இரவு 10 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரும் விமானம் என மூன்று வருகை விமானங்கள் என மொத்தம் ஆறு விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு விமானங்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ஆகும்.
இதையும் படிங்க: சென்னையில் மழை: தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் விமானங்கள்!
மேலும், தொடர்ந்து மழை பெய்தால் விமானங்கள் ரத்து மற்றும் காலதாமதமாக இயக்குவது போன்றவைகள் அதிகமாக்கும் எனவும் கூறப்படுகிறது.
எனவே, விமான பயணிகள் தாங்கள் பயணிக்க வேண்டிய விமானங்கள் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு விமானம் புறப்பாடு வருகை நேரங்களை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தார் போல் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.