சென்னை: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கார்னேசன் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது. ஆலங்குளம் அருகில் அமைந்துள்ள அந்தப் பட்டாசு ஆலையில், பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கருப்பசாமி, அபயாஜ், முத்து, அம்பிகா, முருகஜோதி, சாந்தா உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ராஜ இளங்கோ, சம்பவம் தொடர்பாக நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் எதிரொலி.. இந்தியர்களின் கச்சத்தீவு திருவிழா பயணம் ரத்து!