சென்னை: கடலூர் மாவட்டம், ஆலம்பாடியைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி சங்கரின் மனைவி திவ்யா, தனது எட்டு வயது மகனுடன், அருகிலிருந்த கல்குவாரிக்கு குளிக்கச் சென்றுள்ளார். மழை நீர் தேங்கியிருந்த கல் குவாரியில் குளித்த போது, இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கடந்த 2020 ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, குவாரியின் ஒப்பந்தம் முடிந்த பின் அதை வேலியிட்டு மூடாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் சங்கர், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், குவாரியை மூடாததால் நடந்த இந்த விபத்து மனித உரிமை மீறல் எனக் கூறி, பாதிக்கப்பட்ட சங்கருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், குத்தகை முடிந்த குவாரியை மூட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்த ஆணையம், ஆலம்பாடி குவாரியை வேலி அமைத்து மூட நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.