திருநெல்வேலி: ஆன்லைன் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் கொலையை கண்டித்தும், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மேலப்பாளையத்தில் இன்று (ஆக.12) கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த செய்யது தமீம் என்பவர் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி இரவு மர்ம கும்பல் ஒன்று செய்யது தமீமை வெட்டிக் கொலை செய்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு மேலப்பாளையத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து திமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கொலையான தமீம் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், கொலையில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், கொலையான நபரின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகள் அமைப்புகள் மற்றும் ஜமாத்துகள் சார்பில் மேலப்பாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை முதல் நடைபெற்ற கடை அடைப்பு போராட்டத்தில் பெரும்பாலான வியாபாரிகள் பங்கேற்றுள்ளதால், மேலப்பாளையம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்டவர் வியாபாரி என்பதால் ஒட்டுமொத்த வியாபாரிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சுமார் 1500 மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. போராட்டத்திற்கு சில ஆட்டோ தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் குறைந்த அளவு மட்டுமே ஆட்டோக்கள் இன்று இயக்கப்படுகின்றன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சுதந்திர தினவிழாவில் தேசிய கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும் - நீதிபதி எச்சரிக்கை