தேனி: அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. அதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஊர்வலத்திற்காக அனுமதி கேட்டு சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர்.
அந்த மனுவில், அடுத்த மாதம் தேனி மாவட்டம் முழுவதும் 180 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து 3வது நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாகச் சென்று பெரியாற்றில் கரைக்க அனுமதி வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட சிவசேனா கட்சியினர் மற்றும் விநாயகர் வேடமணிந்த ஒரு நபருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக நடந்து வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன், "சிவசேனா கட்சியின் சார்பாக வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, பூஜைகள் செய்யப்பட்டு அந்ததந்த பகுதியிலேயே விஜர்சனம் செய்யவுள்ளோம்.
இந்த ஏற்பாடு சிவசேனா கட்சியின் மாநிலத் தலைவர் மணிபாரதி தலைமையில் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக தேனி மற்றும் சுற்றுவட்டாரத்தில் என மொத்தம் 180 இடங்களில், விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விஜர்சனம் செய்யவுள்ளோம். அதனைத் தொடர்ந்து, 3வது நாளான செப்.9ஆம் தேதி தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து தேனி ரவுண்டான வழியாக அரண்மனைபுதூர் முல்லை பெரியாற்றில் விஜர்சனம் செய்யவுள்ளோம். தற்போது இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிக் கடிதம் கொடுக்க வந்துள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்குவார் என்ற நம்பிக்கையில் வந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-08-2024/22218610_vinayakar.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்!