சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் காமராஜர் நகர் 13வது வார்டு பகுதி, அதேபோல் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கண்டோன்மெண்ட் 6வது வார்டு பகுதியில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்ததாக 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருவர் உயிரிழப்பு: நேற்று (டிச.04) பல்லாவரம் காமராஜர் நகர் பகுதியில் கண்டோன்மென்ட் சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குழாய் குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்ததால்தான் அதனை குடித்த அனைவருக்கும் இந்த உடல் உபாதைகள் ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (டிச.05) காலை சென்னை பல்லாவரம் காமராஜர் நகர் பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த திருவேதி (56) என்ற நபருக்கும், மோகனரங்கம் (42) என்ற நபருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆறுதல் தெரிவித்த அமைச்சர்: குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரடியாக வந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "பல்லாவரம் காமராஜர் நகர், ஆலந்தூர் மலைமேடு பகுதிகளை சேர்ந்த மக்கள் வயிற்றுப்போக்கு அறிகுறிகளுடன் கடந்த 2 நாட்களாக தாம்பரம் மருத்துவமனையில் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று சென்று கொண்டிருக்கின்றனர்.
வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை: இதில் 14 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதிலும் 3 பேர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில் இருவரும் என்ற வகையில் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பு தென்பட்டிருக்கிறது.
ஆய்வுகள்: இதில் பல்லாவரம் காமராஜர் நகர் பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த திருவேதி (56) என்பவரும், அதே போல் மோகனரங்கன் (42) என்பவரும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். இருவருக்கும் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.
இவர்களுக்கான பாதிப்பு என்னவாக இருக்கும் என ஆராய்வதற்கு அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். குடிநீரில் ஏதேனும் கலந்திருக்குமா? என ஒரு சந்தேகம். அதனால் மலைமேடு பகுதியில் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
6 இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து அங்கேயே போதிய வசதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே பல நாட்களாக படுத்தபடுக்கையாக இருந்துவந்த 88 வயதான வரலட்சுமி என்பவரும் இறந்திருக்கிறார். இவர்கள் இறப்பின் காரணம் பிரேத பரிசோதனை முடிவில் தெரியும்.
இதையும் படிங்க: பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததாக இருவர் இறக்கவில்லை.. அமைச்சர் மறுப்பு..!
மூன்று தினங்களில் முடிவு: எதிர்க்கட்சி தலைவர் பொதுவாகவே எந்த விஷயத்தை எடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே செய்திகளை சொல்வதும், தொடர்ந்து பதற்ற சூழலை உருவாக்கக்கூடிய செய்திகளை பதிவிடுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இன்னும் மூன்று தினங்களுக்குள் பிரேத பரிசோதனை முடிவுகள், குடிநீர் மாதிரி ஆய்வு முடிவுகள் வந்தவுடன் நிச்சயம் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் கூறும் குற்றச்சாடு:
மோகனரங்கனின் உறவினர்: உயிரிழந்த மோகனரங்கம் உறவினர் ஸ்ரீகாந்த் கூறுகையில், "உயிரிழந்த மோகனரங்கம் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார், நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று இருந்த அவருக்கு மாலை நேரத்தில் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரவும் அவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்.
அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பல்ஸ் எல்லாம் சரியாக உள்ளது எந்த பிரச்சினையும் இல்லை என கூறி, வீட்டிற்கு அனுப்பினர். ஆனால், இன்று காலை 7 மணி அளவில் மீண்டும் அவருக்கு வாந்தி மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு அதிக அளவில் மூச்சு திணறல் ஏற்பட்டது.
மோகனரங்கத்தின் உயிரிழப்பு: நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு குளுக்கோஸ் ஏற்றிவிட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறினார்கள். அதனால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
குடிநீர் பிரச்சினை: எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையால்தான் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிலர் மீன் உள்ளிட்ட உணவுகள் சாப்பிட்டதால் பிரச்சனை வருவதாக கூறுகின்றனர். நானும் நேற்று மீன் சாப்பிட்டேன் ஆனால், அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
எங்கள் பகுதியில் இதேபோன்று பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வரும். நேற்று தண்ணீர் வரும்பொழுதே அது கலங்கலாக தான் இருந்தது. மேலும், அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு குடிநீர் மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் குடிநீரில் கழிவு நீர் கலந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்" என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
அரசுக்கான கோரிக்கை: உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சதாசிவம் என்பவரின் மகள் கூறுகையில், "நேற்று மாலையிலிருந்து எனது தந்தைக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பிறகு வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டோம். ஆனால், மீண்டும் இன்று அதிகாலை அவருக்கு வாந்தி, மயக்கம் உடல் உபாதைகள் ஏற்பட்டது.
இதனால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். இங்கு காலையிலிருந்து தற்போது வரை குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக எங்கள் பகுதி முழுவதும் கூறுகின்றனர்.
அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து எங்கள் வீட்டிலிருந்து தண்ணீர் மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், எங்கள் பகுதியில் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அனைவரும் குடிக்கும் குடிநீரை அரசு சுத்தமாக கொடுக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.