தஞ்சாவூர்: கும்பகோணம் பழைய பாலக்கரை பாலம் பகுதியில் நேற்றிரவு (சனிக்கிழமை) பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் ரமேஷ் ஒட்டி வந்த நிலையில், நடத்துநர் செந்தில் குமார் உடன் இருந்தார்.
பாலக்கரை பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த போது, சாலையின் நடுவே 6 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு அவர்களுக்குள் மோதி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. நடுவழியில் இளைஞர்கள் சண்டைப் போட்டு கொண்டுள்ளதை பார்த்த ஓட்டுநர் ரமேஷ் பேருந்தை அங்கு நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அந்த இளைஞர்களில் சிலர், பேருந்தை எடுக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு ஓட்டுநர் ரமேஷ், சாலையின் நடுவே பைக் உள்ளது, அதனை எடுத்தால் தான் பேருந்தை எடுக்க முடியும் எனக் கூறியுள்ளார். இதனால், போதையில் இருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்த நிலையில், பேருந்துக்குள் ஏறி ஓட்டுநர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில் ஓட்டுநர் ரமேஷ் பலத்த காயமடைந்தார்.
மேலும், இச்சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவ்வழியே வந்த இரு செய்தியாளர்கள், அரசு பேருந்து ஓட்டுநர் மீது நடைபெற்ற தாக்குதல்களை ஒளிப்பதிவு செய்துள்ளனர். இதனைக் கண்ட அந்த இளைஞர்கள் செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், இருவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனிடையே பாலக்கரை பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் தகராறில் ஈடுபட்ட இரண்டு நபர்களை பிடித்த நிலையில், மற்ற இளைஞர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பிடிபட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், இருவரும் கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்த சுதர்சன் மற்றும் ஜனார்த்தனன் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், செய்தியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது தொடர்பாக தாக்கப்பட்ட இரண்டு செய்தியாளர்களும் கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தப்பியோடிய பிற நபர்களையும் தீவிரமாக தேடிவந்த நிலையில், ஏற்கனவே பிடிப்பட்ட சுதர்சன்(24), ஜனார்த்தனன்(19) உட்பட உதயகுமார் (25), கார்த்திகேயன் (21) மற்றும் 2 இளைஞர்கள் என 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், இத்தாக்குதலில் அரசு பேருந்து ஓட்டுநர் ரமேஷ் அணிந்திருந்த அரை சவரன் தஙக மோதிரம் மற்றும் ஒன்றரை சவரன் தங்க செயின் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றையும் மர்ம கும்பல் பறித்து சென்றதாகவும் சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.