விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மம்சாபுரம் பகுதியிலிருந்து காலையில் வேலை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லுபவர்கள் அப்பகுதியில் இயக்கப்படும் மினி பேருந்தில் செல்வது வழக்கம். அந்த வகையில் மம்சாபுரத்திலிருந்து மினி பஸ் ஒன்று இன்று (செப்.27) காலை 8 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட சுமார் 30 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் சாலையின் இடது புறம் இருந்த பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர் இந்த விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு குடோனில் வெடி விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்!
இதற்கிடையே தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் காயமடைந்தவர்களை விரைந்து மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மம்சாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் குவிந்து வருகின்றனர். மேலும் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை வழிமறித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காலை நேரத்தில் அதிக அளவில் பேருந்துகளை இயக்கவும், சாலையை அகலப்படுத்தவும் கோரி அப்பகுதியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்