புதுச்சேரி: புதுச்சேரி மரப்பாலம், வசந்த் நகர் பகுதியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 16 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் இருந்த மின் துறைக்கு சொந்தமான 33 ஆண்டுகள் பழைமையான சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளுக்கு இடையே தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த எதிர்பாராத விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்த நிலையில், தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர், விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும், ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராத காரணத்தினால், மினி லாரியில் வைத்து தொழிலாளர்களை மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், கட்டுமானப் பணியில் திருவண்ணாமலை, ஆத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அரியலூர் மாவட்டம் நெட்டகுறிச்சியைச் சேர்ந்த பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகியோர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் சம்பத் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். இந்நிலையில், வாய்க்கால் கட்டும் பணியின் போது, மின் துறையின் சுற்று சுவர் இடிந்து விழுந்த விபத்தில், தமிழக தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: கரூரில் அதிமுக பிரச்சாரத்தில் ரூ.50 பணம்..எவ்வளவு சம்பாதிச்சு இருப்பீங்க..தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கை தேவை - AIADMK Election Campaign