விருதுநகர்: தென்காசியில் இருந்து கோயம்புத்தூருக்குப் பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணன்கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த தற்காலிக பாலத்தில் இந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்து, விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் முத்துச்செல்வி, கார்த்திக் என்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், அதில் 7 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணன்கோவில் போலீசார், இவ்விபத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதனால், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.