சென்னை: சென்னை பல்லாவரம் சாவடி தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு தனது காரை மீனம்பாக்கம் சிக்னல் அருகே உள்ள அவரது நண்பர் வீட்டில் நிறுத்தி உள்ளார்.
பின்னர், இன்று காலை 9 மணியளவில் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு உள்ளார். சரியாக காரானது மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
இதில் பள்ளி மாணவிகள் 4 பேர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 2 பேர் என 6 பேர் காயமடைந்து வலியால் துடிதுடித்தனர். இதனைப் பார்த்த பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீனம்பாக்கம் போக்குவரத்து போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் மீனம்பாக்கம் பகுதியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் திரிசூலம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா மற்றும் வைஷ்ணவி என்ற 2 மாணவிகளுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், தூய்மைப் பணியாளர்களான அங்கேயன், ராவ் ஆகியோருக்கு இடது கால் மற்றும் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 2.5 லட்சம் ரூபாய்க்கு 32 லட்சம் வட்டியா? - கந்துவட்டி சர்ச்சையில் சிக்கிய கரூர் திமுக பிரமுகர்.. கண்ணீர் மல்க ஆட்சியரிடம் புகார் கொடுத்த பெண்!