திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல்(34). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா என்பவருடன் திருமணமாகி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வடிவேல் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வடிவேலுவை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் இன்று சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கிணற்றினுள் அடையாளம் தெரியாத பிரேதத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன, வடிவேலுவின் சடலம் தான் என அடையாளங்களைக் கொண்டு உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அழுகிய நிலையிலிருந்த வடிவேலின் உடலை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, வடிவேலுவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவனைக் கொன்று கிணற்றில் வீசிவிட்டு மனைவி நாடகம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபழக்கத்திற்கு அடிமையான வடிவேல், அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டதாகவும், இதனை அக்கம்பக்கத்தினர் சமரசம் செய்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த வடிவேலின் மாமியார் மரியா, தனது கள்ளக்காதலனான பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும் கோவில்பாளையத்தில் உள்ள வடிவேலின் மாமனார் தேவராஜ் வீட்டில் வைத்து வடிவேலை தாக்கி கொலை செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடலை சாலையோரம் உள்ள கிணற்றில் யாருக்கும் தெரியாமல் வீசிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவி, மாமியார் உள்ளிட்டோர் கைது: அதன் பின்னர், கணவரை காணவில்லை என அவரது மனைவி உள்ளிட்டோர் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கர சம்பவம் குறித்து வடிவேலின் மனைவி திவ்யா, மாமியார் மரியா, மாமனார் தேவராஜ், மரியாவின் கள்ளக்காதலன் பாலாஜி, பாலாஜியின் கூட்டாளிகளான சோனை முத்து, பொன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்த மருமகனை மாமியாரே கள்ளக்காதலனை வைத்து கொலை செய்ததோடு, உடலை கிணற்றுக்குள் வீசிச் சென்றதும், நீண்ட நாட்களுக்குப் பின்னர் துர்நாற்றம் வந்த நிலையில், கிணற்றில் சடலம் மீட்கப்பட்டதும் என இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பேசிய உயிரிழந்த வடிவேலுவின் உறவினர் பௌத்தன், 'திருப்பூர் மாவட்டம், எஸ்.வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த வடிவேலு(34) என்பவர், திவ்யா என்பவரை திருமணம் செய்து 8 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வந்தார். இருவருக்கும் குழந்தையில்லை. இந்நிலையில், வடிவேலு - திவ்யா ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர்.
இதற்கிடையே, கடந்த 25.8.2023 அன்று வடிவேலுவை திடீரென காணமல் போனார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவிநாசிபாளையம் காவல்நிலையத்திலே புகார் அளிக்கப்பட்டுள்ளது.
7 பேர் கைது: குற்ற எண் 18/2023 வரிசையின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை தேடிவந்தனர். இந்நிலையில், காணாமல் போன வடிவேலுவை கொலை செய்துவிட்டு கோவில்பாளையத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றுக்குள் வீசிச் சென்று விட்டதாக போலீசார் அளித்த கூறிய தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலையை அவரது மனைவி திவ்யா, மாமியார் மரியா, மாமனார் தேவராஜ், மரியாவினுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஒருவர் என மொத்தம் 7 பேர் இக்கொலை செய்துள்ளதாக போலீசாரின் விசாரணை கூறுகிறது.
இந்நிலையில், இது போன்று ஒருவரை காணவில்லை என்று புகாரளித்தால், காவல்துறையினர் தயவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், கொலை தொடர்பாக பாலாஜி, கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வடிவேலின் மனைவி திவ்யா (24). திவ்யாவின் பெற்றோர் மரியாள் (48) - தேவராஜ் (50), திவ்யாவின் அக்காவின் கணவரான பொங்கலூரை அடுத்த காட்டூர் புதூரைச் சேர்ந்த தெய்வேந்திரன், கரூர் குளித்தலையைச் சேர்ந்த முத்து (32), மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் (53) ஆகிய ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: நெல்லை தீபக் ராஜா பசுபதிபாண்டியன் ஆதரவாளரா? பழிக்குப்பழியாக கொலையா? - திடுக்கிடும் பின்னணி - Nellai Youth Murder Case