கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த் - ஜீவிதா தம்பதியினர். இவர்களின் மகன் கவின் சொற்கோ (வயது 7). இச்சிறுவன் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் சிறுவன் கவினுக்கு திருக்குறள் படிப்பதில் ஆர்வம் இருந்துள்ளது. இதனால் தினமும் திருக்குறள் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். நல்ல நினைவாற்றல் இருப்பதன் காரணமாக, கடினமான திருக்குறள்களை கூட நினைவில் வைத்திருந்து எளிதாக சொல்லும் திறன் கவின் சொற்கோவிற்கு இருந்துள்ளது. இதனையறிந்த சிறுவனின் பெற்றோர் அதற்கேற்ப திருக்குறள்களைச் சொல்லி கொடுத்துள்ளனர்.
அந்தவகையில், சிறுவன் தற்போது 100 முதல் 1 வரையுள்ள 100 திருக்குறள்களை தலைகீழ் வரிசையில் சொல்லி அசத்தி உள்ளான். அதுமட்டுமின்றி 1 முதல் 100 வரை வரிசையாக குறள்களை சொல்வது, வரிசை எண்களைக் கூறினால் அந்த எண்ணிற்கான குறளைச் சொல்வது, அதிகாரத்தின் பெயரைக் கூறினால் அதிலுள்ள 10 குறள்களை சொல்வது என திருக்குறளைப் பல்வேறு வகையிலும் கூறி அசத்தி வருகிறான். மேலும், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு போட்டி உள்ளிட்ட பல போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளான்.
இதுகுறித்து கவின் சொற்கோ கூறுகையில், "எனது பெற்றோர் பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி தமிழ், ஆங்கில கதைகள், திருக்குறள், பொது அறிவு தகவல்கள் எனப் பலவற்றை சொல்லி கொடுக்கின்றனர். திருக்குறள் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது வரை 100 குறள்களை படித்துள்ளேன். அதை எப்படி கேட்டாலும் தவறில்லாமல் சரியாக சொல்வேன். 1330 திருக்குறளையும் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை" எனத் தெரிவித்தான்.
7 வயது சிறுவன் 100 திருக்குறள்களை தலைகீழாக நல்ல உச்சரிப்போடும், பிழையில்லாமலும் சொல்லி அசத்தி வருவது ஆச்சரியத்தையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஈரோடு: வேட்டுவ கவுண்டர் சமூக நீதி மாநாட்டில் புழுதி பறக்க வாகன சாகசம் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு!