திருவாரூர்: ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதாவை பிப்ரவரி 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர், சேரன்குளம் பகுதியைச் சேர்ந்த மனோகரன், மன்னார்குடி ஒன்றியக் குழு தலைவராக உள்ளார். இவரது மனைவி அமுதா சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ரோஸ்லின் என்பவர் தங்களுக்குச் சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை சேரன்குளம் ஊராட்சி தலைவர் மோசடி செய்ததாக் கடந்த 2017ஆம் ஆண்டு திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அவரது புகாரில், “தனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக, போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்து, எனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து, மன்னார்குடி நடேசன் தெருவில் உள்ள தங்களுக்குச் சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான சுமார் 1 லட்சம் சதுர அடி நிலத்தை சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, அவரது கணவர் அபகரித்து கிரயப்பத்திரம் செய்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, அவரது கணவர் மற்றும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தலைமறைவாக இருந்தார். இதனை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமுதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பிப்ரவரி 13ஆம் தேதி இந்த மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அமுதா 3 நாட்களுக்குள் விசாரணை நீதி மன்றமான திருவாரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அமுதா நேற்று (பிப்.15) திருவாரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், சேரன்குளம் ஊராட்சி தலைவர் அமுதாவை பிப்ரவரி 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், அமுதா திருவாரூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: "எங்களோட சேர்ந்து குரல் கொடுங்க" எடப்பாடிக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர்