சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்கள் மற்றும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சென்னை பெரம்பூரில் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் உரையாற்றிய அவர், "சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தவரை இப்படிச் செய்து விட்டார்கள் என ஆதங்கம் தெரிவித்தார். மேலும் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இந்த சம்பத்திற்கு பின்னே யாரெல்லாம் உள்ளார்கள்; ஏன் இப்படிப்பட்ட செயலை செய்தார்கள் எனக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் புதைக்கப்படப் போவதில்லை; விதைக்கப்பட போகிறதாகத் தெரிவித்த அவர், தலித் விடுதலை இத்துடன் முடிந்தவிட்டதாக நினைக்கவேண்டாமெனவும், அவர் வளர்த்தெடுத்த ஆயிரம் ஆம்ஸ்ட்ராங்கள் இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார். ஒரு மாநில தலைவர் மீதே துணிச்சலாக கை வைக்கிறார்கள் என்றால் ஒரு சிறிய கிராமத்தில் மக்களுக்காக போராடும் தலைவர்கள் நிலை என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டுமெனவும், தலித் சமூகம் மிகப்பெரியது. அதன் தலைவர்கள் மீது கை வைத்தால் சமூகம் அமைதியாக இருக்காது எனவும் செல்வப்பெருந்தகை எச்சரித்தார்.
இதையும் படிங்க: 'ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதானவர்களை போலீஸ் காவலில் எடுக்கத் திட்டம்' - போலீசார் தரப்பில் தகவல்