சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் , மாமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கு, செல்வப் பெருந்தகை பொன்னாடை அணிவித்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை; ''விக்கிரவாண்டியில் இன்று மாலை 4 மணிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் முன்னிலையில் இடைத்தேர்தல் தொடர்பான செயல்வீரர்கள் கூட்டம் நடக்க உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அன்னியூர் சிவா வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்'' என்றார்.
மேலும், '' திமுக வேட்பாளர் வெற்றி பெற தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் விக்கிரவாண்டிலிருந்து பணியாற்றுவார்கள். 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா வெற்றி பெற உள்ளார். திமுகவுடன் செல்வப் பெருந்தகை 25 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்திற்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை, திமுகவுடன் 250 வருடங்கள் ஒப்பந்தம் போட்டாலும் தவறில்லை என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் சொல்லுங்கள்'' என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், '' எடப்பாடி பழனிசாமி நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்தபோது 20க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த குஜராத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் நரேந்திர மோடி ஆட்சியில் இருந்த பொழுது இறந்துள்ளனர். தற்போதும் இறந்துள்ளனர்'' என தெரிவித்தார்.
அத்துடன் ''சம்பந்தப்பட்டவர்களை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது அரசு. 2001 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 52 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்கள். 30க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்பார்வை போனது. அதே ஆண்டில் சென்னை அருகே இருக்கக்கூடிய கொரட்டூர், ரெட்டில்ஸ் மற்றும் அம்பத்தூரில் கள்ளச்சாராயம் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ''கள் ஏற்றுமதியால் தமிழக வருமானம் உயரும்" - 'கள்' நல்லசாமி சொல்லும் ஆலோசனைகள்!