சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராகக் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் என்ற கொடிய எமனை அகற்ற வேண்டும்.
சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4ஆம் தேதி, நீட் தேர்வு முடிவை வெளியிட்டார்கள்.
நீட் தேர்வில் இரட்டைப்படையில் தான் மதிப்பெண் வழங்கப்படும். ஆனால், ஒற்றைப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டால், வினாத்தாள் கொடுப்பதற்கு தாமதமானதால் கிரேஸ் மார்க் கொடுக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.
ஏழை, எளிய மாணவர்களுக்கு கிரேஸ் மதிப்பெண் கொடுப்பதில்லை. நீட் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்களுடன் ஒப்பந்தம் போட்டு கிரேஸ் மதிப்பெண் கொடுக்கிறார்கள். நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. இது மாணவர்களை ஏமாற்றும் செயல்.
நீட் தேர்வு வர்த்தகத்தின் சூதாட்டம், வணிகமாக மாறிவிட்டது. நீட் தேர்வை உடனடியாக நீக்க வேண்டும். நீட் தேர்வில் வருடந்தோறும் தற்கொலை அதிகரித்து வருகிறது. யார் மருத்துவர் ஆகவேண்டும், ஆகக்கூடாது என்று ஆர்எஸ்எஸ், பாஜக தான் முடிவு செய்கிறது.
இந்தியா பாதுகாப்பு: இந்தியா பாதுகாப்புடன் இருக்கிறது என்று மோடி தேர்தல் பரப்புரை செய்தார். ஆனால், பிரதமராக மோடி பதவியேற்ற நாளில் 10 பேரை பயங்கரவாதிகள் கொன்று இருக்கிறார்கள். நாளை (ஜூன் 11) காலை 11 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 1,500 பேர் கலந்து கொள்கிறார்கள்.
இக்கூட்டத்தில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் போது, காங்கிரஸ் சார்பில் முழு ஒத்துழைப்பு கொடுத்து கோட்டைக்கு அழைத்து வருவோம்.
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு நீதி, தமிழிசை செளந்தரராஜனுக்கு ஒரு நீதியா? வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கட்சி பணியாற்றிய தமிழிசை செளந்தரராஜனை பாஜக கைவிட்டுவிட்டது” என கூறினார். பேட்டியின் போது, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு மற்றும் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்! - VIKRAVANDI ASSEMBLY BY ELECTION