தஞ்சாவூர்: பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது குஜராத் ஸ்டேட் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிறுவனம் ஆரம்பித்து, ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாகவும், மக்களின் வரிப்பணத்தை வீணாக்கியது முட்டாள்தனம் என்றும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டேட் பேங்க் தேர்தல் பத்திர மோசடி இந்தியாவின் மிகப்பெரிய மோசடி. நிமிடங்களில் கோடிக்கணக்கான பதிவுகளைத் தரவல்ல, முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட வங்கி சேவையில் வெறும் 22 ஆயிரத்து 256 பதிவுகள் குறித்த தகவல்களை அளிக்க ஸ்டேட் பேங்க் நிர்வாகம் ஜூன் 10ஆம் தேதி வரை காலக்கெடு கேட்டுள்ளது.
தேர்தல் முடியும் வரை இந்த ஊழல் முறைகேட்டை மறைக்கத்தான் என்றும், இதில் பல வெளிநாட்டு எதிரிகளின் பணம் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதனைக் கண்டித்து இன்று (மார்ச் 6) மாலை கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் காந்தி சிலை அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், மாநகராட்சி மேயர் கே.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சி வரை விமானத்தில் வந்தார். பின் சாலை மார்க்கமாக கும்பகோணம் வந்தார். அப்போது, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு, குஜராத் ஸ்டேட் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடங்க மக்களின் வரிப்பணம் ரூபாய் 20 ஆயிரம் கோடியை வீணடித்துள்ளது முட்டாள்தனம் என சிஏஜி அறிக்கை அளித்துள்ளது.
இந்த முறைகேடு பாஜகவிற்கு தேர்தலில் எந்தவித பாதிப்பை ஏற்படுத்தி விடாத வகையில், நிமிடத்தில் பல கோடி கணக்கு விவரங்களை அளிக்கும், முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகம் வெறும் 22,256 பத்திர விவரங்களை அளிக்க ஜூன் 10ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டிருப்பது என்பது, இதனை தேர்தல் முடிவு வரும் வரை மூடி மறைக்கத்தான்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க நூறு சதவீதம் வாய்ப்புள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் மனசாட்சியாகவும், இந்தியா கூட்டணியின் மனசாட்சியாகவும் விளங்குகிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணி இதுவரை 4 தேர்தலைச் சந்தித்து அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது போலவே, தற்போது 5 முறையாக இந்த வெற்றி தொடரும். திமுக - காங்கிரஸ் உறவில் எந்த பிணக்கும் இல்லை, இனிப்பான உறவு தொடரும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருமண பரிசு தராத கணவருக்கு கத்திக்குத்து - ஆத்திரத்தில் மனைவி அதிரடி முடிவு!