சென்னை: தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு விலைக்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து, இந்தியாவில் மிகப்பெரிய நிலக்கரி ஊழலை பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக இருக்கும் அதானி செய்துள்ளதாக குற்றம் சாட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
செலப்பெருந்தகை கண்டனம்: இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பலனடைந்த கோடீஸ்வரர்களில் முதன்மையானவராக அதானி விளங்கி வருகிறார்.
அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை மிக உயர்ந்த விலைக்கு விற்று பெருத்த லாபத்தை ஈட்டியதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன. 2014ஆம் ஆண்டு முதல் இந்தோனேஷியாவில் இருந்து மலிவான விலைக்கு வாங்கிய, தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு மோசடியாக விற்று, அதானி குழுமம் ரூ.3,000 கோடி கொள்ளை லாபம் ஈட்டியது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துகிற மின்உற்பத்தி நிறுவனங்களால் காற்று மாசு ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். காற்று மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் இந்தியர்களை பலி வாங்குவதாக ஒரு ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமரின் நெருங்கிய நண்பர்கள் கடந்த 10 ஆண்டுகளில் சட்டத்தை மீறி இந்தியர்களை சுரண்டுவதன் மூலம், தங்களை வளப்படுத்திக் கொண்டதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும். குறைந்த கலோரி கொண்ட நிலக்கரியை 2014ஆம் ஆண்டு முதல் 22 முறை கப்பல் மூலம் 1.5 மில்லியன் டன் அனுப்பியிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக்குழு, இதுகுறித்து விசாரித்து உண்மையை மக்கள் மன்றத்தில் வைக்கும் என்று தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். ஊழலுக்கு எதிரான தலைவர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
இதன்மூலம் மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்குகிற நேரத்தில் பிரதமர் மோடியின் புனிதர் வேடம் அம்பலமாகி உள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்: மேலும் இது குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக ஆசியுடன், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில், இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்த தரம் குறைந்த நிலக்கரியை, மூன்று மடங்கு அதிக விலைக்கு வாங்கியதன் மூலம் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருப்பது புதிய ஆவணங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது.
குஜராத் மாநில முதலமைச்சராக பிரதமர் மோடி இருந்தபோது அதானியின் துறைமுகத்திற்கு ஒரு ச.மீ 1 ரூபாய் என மிகக் குறைந்த விலையில் ஏராளமான நிலம் அள்ளித் தரப்பட்டது. 2014ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சியில் பிரதமர் மோடி அமர்ந்த பின்னர், கள்ளக்கூட்டு முதலாளித்துவ நடவடிக்கைகள் புதிய உச்சத்தை தொட்டன.
உலக பணக்காரர்களில் 650வது இடத்தில் இருந்த அதானி ஏராளமான சொத்துக்களை குவித்து உலகின் முதல் பணக்காரர்கள் பட்டியலுக்கு சென்றார். இந்த காலகட்டத்தில் அதானி தொடர்பாக வந்த ஏராளமான ஊழல்கள் மீது முழுமையான விசாரணையின்றி உள்ளன. அதில் மிக முக்கியமான ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழலாகும்.
புதிதாக வெளிவந்துள்ள ஆவணங்களின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி விற்பனை செய்ததில் மெகா ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. 2014ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை அதானி வாங்கிக் கொடுத்துள்ளார்.
இடைத்தரகராக மட்டும் இருந்துகொண்டு குறைந்த விலையில் வாங்கிய தரமற்ற நிலக்கரியை தரமானது என்று அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கிறார். ஓசிசிஆர்பி (OCCRP) என்ற இணையதளம் வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி, இந்தோனேசியாவில் நிலக்கரி வாங்கப்பட்ட விலை மற்றும் அதன் தரம் தொடர்பான அனைத்தும் அம்பலமாகியுள்ளது.
அதன்படி 2014ஆம் ஆண்டில் ஜான்லின் என்ற நிறுவனம் 3500 கிலோ கலோரி தரம் கொண்ட நிலக்கரியை இந்தோனேசிய சுரங்கங்களில் இருந்து, ஒரு மெட்ரிக் டன் 28 டாலர் என்ற விலையில் வாங்கியுள்ளது. அதே நிலக்கரியை அதானி நிறுவனம் 6000 கிலோ கலோரி என ஆவணங்களை மாற்றி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒரு மெட்ரிக் டன் 91 டாலர் விலைக்கு விற்றுள்ளது.
இதன் மூலம் ஒரு டன்னுக்கு 60 டாலர் அதானி நிறுவனம் கொள்ளையடித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் மட்டும் 24 முறை கப்பல்களில் நிலக்கரி வந்திருப்பதாக ஓசிசிஆர்பி திரட்டிய ஆவணங்கள் காட்டுகின்றன. ஓராண்டில் 15 லட்சம் டன் அளவிற்கு நிலக்கரி விற்பனையில் ரூ.6 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது.
தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெறும் நிலக்கரி வியாபாரத்தில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மெகா ஊழலால் தமிழ்நாடு மின்சார வாரியம் கடனில் மூழ்கி மீள முடியாமல் தத்தளித்து வருகிறது. மேலும் நஷ்டத்தை ஈடு செய்ய மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு மக்கள் தலையில் தொடர்ந்து சுமை ஏற்றப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்தியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பால் பொதுமக்களுக்கு சுகாதார கேடுகளும், ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியதற்கு அதிமுக மற்றும் பாஜக ஆட்சியாளர்கள் முழுமையான பொறுப்பேற்க வேண்டும்.
அதானியின் பகல் கொள்ளையில் அதிமுக மற்றும் பாஜக ஆட்சியினர் பங்காளிகள் என்பதில் ஐயமில்லை. எனவே, தரமற்ற நிலக்கரியை கூடுதல் விலை கொடுத்து வாங்கிய கூட்டுக் கொள்ளை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதானி நிறுவனத்தின் மீதும், சம்பந்தப்பட்ட அதிமுக மற்றும் பாஜக ஊழல் பேர்வழிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்வதுடன், மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை அபராதத்துடன் வசூலிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அய்யாக்கண்ணு கைது.. திருச்சியில் செல்போன் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்!