தூத்துக்குடி: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி, டூவிபுரத்தில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாம் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் சீமான் கருணாநிதியைப் பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
கருணாநிதி இறக்கும் போது சீமான் அவரை பற்றி புகழ்ந்தார். ஆனால், தற்போது தேவையில்லாமல் பேசி வருகிறார். கோடான கோடி தொண்டர்கள், தலைவரின் கண் அசைவிற்காக காத்திருக்கின்றார்கள். பொறுமையாக இருக்கின்றோம். சாட்டை துரைமுருகன் சாதிப்பெயரைச் சொல்லி இழிவாக பேசுகிறார். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கருத்துரிமை பறிக்கப்படுவதாக கூறுகின்றார் சீமான்.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தேவன் பிள்ளை இல்லை என்றும், சாத்தான் பிள்ளைகள் என்றும் கூறுகின்றார். தூய்மைப் பணியாளர்களை தெலுங்கர் என்று கூறுகின்றார் சீமான், இதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. சீமான் மனநிலையை அவர் சோதிக்க வேண்டும். பெண் காவலர்களையும், உயர் அதிகாரிகளின் தவறான முறையில் சவுக்கு சங்கர் பேசினார்.
இதற்கு பெண் காவலர்கள் புகார் கொடுத்து இருக்கின்றனர். அதற்கு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. பெண் காவலர்களை தவறாகச் சொன்னவர்களை இவர் ஏற்றுக்கொள்கின்றாரா?. கருத்துரிமை பறிக்கப்படுவதாக அவர் கூறுகிறார். தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை உபயோகப்படுத்தி பேசி பிரச்னை உண்டாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றார்.
சீமான் அவருடைய கட்சிக்கு இலங்கை தமிழர் பிரச்னையை முன்னிறுத்தி உலக அளவில் பல்வேறு வகையில் நன்கொடை பெற்று வருகிறார். இலங்கையில் எப்படி ராஜபக்சேயை எதிர்க்கின்றானரோ, அதே போன்று தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்க வேண்டும் என்று காட்டிக்கொள்வதற்காக திமுகவையும், திமுக தலைவர்களையும் அவர் பேசி வருகிறார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது. அரசியல் முதிர்ச்சியில்லாத ஒரு தலைவராக அவர் தெரிகிறார். தமிழ் சமூகத்தை தவறான தகவல் மூலம் தவறாக வழிநடத்தி வருகிறார் என்பதை கூறிக் கொள்கின்றேன். பச்சோந்தி போல இன்று ஒன்று, நாளை ஒன்று என பேசி வருகிறார். தான் பேசியது என்னவென்று தெரியாமல் அவர் பேசி வருகின்றார்.
அரசியல் தலைவருக்கு அவர் தகுதியானவர் அல்ல, அரசியல் பண்பற்றவர். தரமில்லாத ஒரு அரசியல் நடத்தி வருகிறார். எங்கள் தலைவரைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை. மேலும், சீமான் மீது புகார் அளித்தல் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், "கருத்துரிமை பறிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்று பாஜகவா, நாம் தமிழர் கட்சியா என முன்னெடுத்து வருகின்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. மக்கள் அவரை நிராகரித்து வருகிறார்கள்" என தெரிவித்தார்.