தருமபுரி: திராவிட கட்சிகள் எதுவுமே சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்காது, ஏனென்றால் தமிழர் அல்லாதவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தியது தெரிந்துவிடும் என இன்று (ஏப்.08) தருமபுரி தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரி நான்கு ரோடு அருகே குமாரசாமி பேட்டையில் திறந்த வெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மக்களிடையே பேசிய அவர், “மருத்துவர் ராமதாஸ் சமூக நீதியைப் பேசிவிட்டு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கலாமா என்ற கேள்வியை முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பினார். திமுக, பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைக்கும் போது, அன்று சமூக நீதியைப் பேசிக் கொண்டிருந்ததா திமுக. பாஜக கோட்பாடு சமூக நீதிக்கு எதிரானது, நீங்கள் ஏன் கூட்டணி வைத்தீர்கள், திடீர் திடீரென இவர்கள் புனிதராகிப் போவார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறோம், இட ஒதுக்கீடு முறையை வலியுறுத்தி மண்டல் கமிஷனை அமைக்க வலியுறுத்தியவர் முத்து, அதற்குப் பிறகு சமூக நீதியை வலியுறுத்தி வந்தவர் மருத்துவர் ராமதாஸ், அதன் பிறகு வழி வழியே நாங்கள் சாதி வாரிக் கணக்கெடுப்பு, சமூக நீதியை வலியுறுத்திப் போராடி வருகிறோம்.
திராவிட கட்சிகள் எதுவுமே சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்காது, ஏனென்றால் தமிழர் அல்லாதவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தியது தெரிந்துவிடும். இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொடுக்காதீர்கள், எண்ணிக் கொடுங்கள். அள்ளி கொடுக்காதீர்கள், அளந்து கொடுங்கள். சமூக நீதி காவலர்கள் என்று பேசிக்கொள்ளும் நீங்கள் ஏன் சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்கவில்லை. பீகாரில் நிதீஷ்குமார் சாதி வாரிக் கணக்கெடுப்பை எடுத்துக் கொடுக்கிறார், அது மாநில அரசு முடிவு செய்து எடுக்கிறது, ஆனால் தமிழ்நாட்டில் எடுக்க மறுக்கிறார்கள்”, என பேசியுள்ளார்.