சென்னை: சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் பிரபல தனியார் ஐடி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இரவு பணிக்கு வரும் பெண்களுக்கு பணி முடிந்து வீடு வரை அழைத்துச் சென்று விடுவதற்கு வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வழக்கம்போல் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பணிக்கு வந்த பெண் ஐடி ஊழியர்களை, பணி முடிந்ததும் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு காரில் புறப்பட்டு உள்ளனர். இவர்களுடன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌசல் குமார் (27) காவலாளியாகச் சென்றுள்ளார்.
காரை அரியலூரைச் சேர்ந்த ராஜசேகர் (35) என்பவர் ஓட்டிச் சென்று உள்ளார். இதனைத் தொடர்ந்து, பெண் ஐடி ஊழியர்களை அவர்கள் வீடுகளில் பத்திரமாக இறக்கி விட்ட பின்னர் கார் மீண்டும் தனியார் நிறுவனத்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது. சுமார் நள்ளிரவு 2 மணியளவில் பல்லாவரம் துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் சென்று கொண்டு இருந்த காரானது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நாராயணபுரம் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், இது குறித்து அருகில் உள்ள பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், ஏரியில் மூழ்கிய காரை ஜேசிபி இயந்திரம் மூலம் மேலே தூக்கினர்.
இதில் கார் ஓட்டிய ராஜசேகர் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலும், பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்காக காரில் சென்ற பீகாரைச் சேர்ந்த காவலாளி கௌசல் குமார் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் ராஜசேகரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதேபோல், உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி கௌசல்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'சூனா பானா' காமெடி போல நிஜத்தில் அரங்கேறிய சோக சம்பவம்.. நண்பரின் மதுவை அருந்திய இளைஞர் பலி!