ராணிப்பேட்டை: சோளிங்கர் தாலுகா, வேலம் கிராமத்தில் உள்ள ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (45). ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக இவரது மனைவி விஜயலட்சுமிக்கும், இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வெண்ணிலா என்ற பெண்ணை அறிவழகன் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்களுக்கு ஜனுஷ்ஸ்ரீ என்ற 5 வயது குழந்தையும், தரணிகா என்ற 2 வயது குழந்தையும் என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே முதல் மனைவியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்ததையடுத்து, அந்த வழக்கு தள்ளுபடியானதாக கூறப்படுகிறது. அதனால், முதல் மனைவி விஜயலட்சுமி தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக வேலம் கிராமத்துக்கு வந்துள்ளார். அதனால் அறிவழகனின் முதல் மனைவி மற்றும் 2வது மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் கடும் மனஅழுத்தத்திற்கு உள்ளான வெண்ணிலா, தனது 2 பெண் குழந்தைகளுடன் வேலம் கிராமத்தில் இருந்து, வாலாஜா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் தனது மகள்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதாவது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் தாய், மகள் என 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பின்னர், இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தனது குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தீயாகப் பரவி உள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வெண்ணிலாவின் உறவினர்கள், உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தவர்களைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி ரயில்வே போலீசார், இறந்த தாய் மற்றும் குழந்தைகளின் உடல்களை மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடங்கியது வருவாய்த்துறை அலுவலர்களின் வேலை நிறுத்தம்; வெறிச்சோடிய அலுவலகங்கள்!