வேலூர்: வேலூரில் பேருந்து வசதி வேண்டி பள்ளி சீருடையில் வந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீர் முகாம் நடைபெற்றது. அப்போது 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துக் கொண்டு கோவிந்த சாமி என்பவர் மனு அளிக்க வந்தார். அந்த மனுவில், "வேலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட நாயக்கனேரி, இரண்டாவது கொள்ளை மேடு, குப்பம்பட்டி, வாணியங்குளம் பள்ளஇடையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
எங்களுக்கு ஒட்டோரி வழியாக நாய்க்கனேரிக்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லை. இதன் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு சொல்வோர் என பலரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடபட்டு இருந்தது.
இதையும் படிங்க: ரூ.6 கோடி அளவுக்கு மணல் கொள்ளை? ட்ரோன் காட்சிகளுடன் புகார்.. புதுக்கோட்டையில் அரசின் நடவடிக்கை என்ன?
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். பின்னர் "பள்ளி மாணவர்கள் எல்லாம் இதுபோன்று அழைத்து வந்து மனு அளிக்க வரக்கூடாது. தங்களுடைய பெற்றோர்களிடம் சொல்லி மனு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். மேலும் தற்போது அனைவரும் பள்ளிக்கு போக வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகிறதா? என்று உடனே விசாரணையும் செய்தார்.