கோயம்புத்தூர்: இந்தியா முழுவதும் ஏப்.19ஆம் தேதி முதல் ஜூன்.1ஆம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா கோயில் சந்திப்பு பகுதியில் பிரதமர் மோடியின் வாகன பேரணி (ரோட் ஷோ) நிகழ்ச்சி நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. பிரதமர் மோடி அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஊர்வலமாக வந்தார்.
அவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்ஏல்ஏ ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கோவை சாய்பாபா கோயில் சந்திப்பில் தொடங்கிய இந்த பேரணியானது, ஆர்எஸ்புரம் வரை 2.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்றது.
பொதுமக்கள் அவதி: பிரதமர் மோடியின் கோவை வருகையை பாஜகவின் சார்பில் சாலையின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஒருபகுதியாக, வடகோவை சிந்தாமணி பெட்ரோல் பங்க் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலையில் யோகாசனம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சாய்பாபா காலனியில் இருந்து சிந்தாமணி பெட்ரோல் நோக்கி வந்துக் கொண்டு இருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி இல்லாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு யோகசனம் செய்து கொண்டு இருந்தவர்கள் ஒதுங்கி நிற்க வைக்கப்பட்டு பின்னர், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பப்பட்டன. இதனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கூட்டநெரிசலில் நோயாளிகளுடன் பரிதவித்தனர்.
இதேபோல, சாய்பாபா காலணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கை முறிவு சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவர், சாலையில் வாகனம் அனுமதிக்கப்படாத நிலையில் நடந்தே மருத்துவமனைக்கு அவரது உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
தேர்தல் விதிமுறைகளை மீறியதா? தேர்தல் பிரசாரங்களில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை அப்பள்ளியின் ஆசியர்கள் அழைத்து வந்ததாக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் இணைந்த பாமக.. எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?