சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவு பெற உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அச்சடித்த அனைத்து புத்தகங்களையும், நோட்டுகளையும் அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜுன் மாதம் பள்ளிகள் திறக்க பட உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அச்சடித்த அனைத்து புத்தகங்களையும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் பாடப்புத்தகங்களும், தமிழ்நாடு காதிக நிறுவனத்தின் மூலம் நோட்டு புத்தகங்களும் முழுமையாக மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளுக்கு புத்தகங்களை பாதுகாப்புடன் அவை அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்டக் கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு தாமதம் இல்லாமல் புத்தகங்களை வழங்குவதற்காக வழிவகை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
இதனையடுத்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட தேவைப்பட்டியலின்படி பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை சரிபார்த்து பெற்றுக்கொள்வதுடன் அதை உறுதி செய்திட வேண்டும் என்கிறது, மேலும் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து செலவினையும் மாவட்டங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு தயாராகும் புத்தகங்கள்: இவ்வாறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் மாவட்ட குடோனில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணியை துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் , மழை நாட்களை தவிர பிற நாட்களில் திட்டமிட்டு மாவட்ட குடோனில் இருக்கும் பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாள் அன்று மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறிப்பட்டுள்ளது.
அச்சடித்த புத்தகங்களின் எண்ணிக்கை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2 கோடி 68 லட்சம் விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கு விற்பனை செய்ய ஒரு கோடியே 32 லட்சம் பாடப்புத்தகங்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
பேக் டூ ஸ்கூல் : கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் ஜூன் மாதம் 2 வது வாரத்தில் திறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறையால் கூடிய விரைவில் வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.
பள்ளிகள் திறந்த உடன் 1 முதல் 7ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான புத்தகங்களும் , 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான முழு புத்தகங்களும் வழங்க தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 110 ரூபாயில் 'ரெயின் அலர்ட் சிஸ்டம்’.. 12 வயது பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!