திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக வட்ட பேருந்து சேவையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி துவங்கி வைத்தார். இந்த வட்ட பேருந்தானது திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழப்புலி வார்டு ரோடு, காந்தி மார்க்கெட், போன்ற பகுதியிலிருந்து மத்திய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை உறையூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வரும்.
மேலும் நாள் ஒன்றுக்கு 17 முறை இந்த பேருந்து சேவையானது இயக்கப்படும் என்றும் இதனால் பொது மிகுந்த பயணைவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பேருந்து சேவையைத் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் குறித்து விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்த கருத்து, அவரது கருத்து தனிப்பட்ட கருத்தாகும். இதனை முதிர்ச்சியற்ற கருத்து என்று அவர்களது கட்சி நிர்வாகிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதனால், இது குறித்து விரிவாக பேச விரும்பவில்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மரங்களில் மின் வயர்கள் பதித்த நெல்லை மின்வாரியம்.. அமைச்சர் அதிரடி உத்தரவு!
"மத்திய அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு வெளியிட வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வருகின்ற 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தயுள்ளார். கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகம் செயல் பட்டு வருகிறது.
சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக, திருச்சி பெரிய நகரமாக இருக்கிறது. எனவே, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி கோட்டம் அமைக்க, அமைச்சர் சிவசங்கரிடம் கோரிக்கை வைக்கப்படும். இது குறித்து ஏற்கனவே திருச்சி மூத்த அமைச்சர் கே.என்.நேரு போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. திமுக அமைச்சர் முத்துசாமியும் இதைச் சொல்லி இருக்கிறார். எனவே, இதில் அரசியல் கலக்கக்கூடாது என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார் அதையே நாங்களும் சொல்கிறோம்" என தெரிவித்தார்.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின்னர் அக்டோபர் 7ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.