வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டமான திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதியில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பள்ளிக்கு நேற்று இரவு ஒரு மெயில் (Gmail) ஒன்று வந்துள்ளது. அதில் பள்ளி வகுப்பறைகளில் 28 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது எனவும் அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தனியார் பள்ளியின் தலைவர் எம்.எஸ்.சரவணன், உடனடியாக காட்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த மெயில் இதே பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவனின் மெயில் ஐடியில் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் ஏழாம் வகுப்பு மாணவனிடம் மேற்கொண்ட விசாரணையில், “சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஸ்டார் திரைப்படத்தைப் பார்த்து தனக்கு விடுமுறை வேண்டுமென விளையாட்டுத்தனமாக" இப்படி ஒரு மெயிலை அனுப்பியதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து, போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயிலும் இப்பள்ளியில் அதே பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் மற்றொரு அணி.. எடப்பாடிக்கு அழுத்தம்? - தலைவர்கள் கூறுவது என்ன?