திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மேல் கன்றாம்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(48) மற்றும் வள்ளி(45) தம்பதியினர். வெங்கடேசன் கூலி தொழிலாளியாக உள்ள நிலையில், வள்ளி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் வள்ளி தனக்கு வீடு கட்டித்தருமாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால், தற்போது வரை வீடு கட்டுத்தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, வள்ளியின் மனுவைப் பரிசீலனை செய்து பார்த்த போது, கடந்த 2015 - 2016ஆம் ஆண்டில் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டப்பட்டுள்ளதும், அவருக்குத் தெரியாமல் போலி வங்கிக் கணக்கு ஒன்று துவங்கி அதில் பணமும் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி, வள்ளி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது பிடிக்கப்பட்ட பி.எப் பணத்தை வங்கியில் எடுக்கச் சென்ற போது அந்த வங்கி கணக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக முடக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளி குடும்ப செலவுக்காக 100 நாள் வேலைத் திட்ட பணத்தைக் கூட எடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வள்ளி, "முன்னாள் ஊராட்சி செயலராக இருந்த ரமேஷ் என்பவரிடம் தன்னுடைய வீட்டுப் பத்திரம், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். பலமுறை வீடு கட்டித் தருவதாகக் கூறி தன்னை போட்டோ எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு எங்கு கட்டியுள்ளார் என்பது தெரியவில்லை. தற்போது எனது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
வங்கியில் கேட்டால், பஞ்சாயத்து அலுவகத்தில் கேட்க சொன்னார்கள். இதுதொடர்பாக துத்திப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் சென்று கேட்ட போது, யார் வங்கிக்கணக்கை முடக்கியது எனத் தெரியவில்லை, மனு கொடுத்துவிட்டுச் செல்லுங்கள் பார்க்கின்றோம் என கூறுகின்றனர்" இவ்வாறு வேதனையுடன் கூறியுள்ளார்.
அதனால் மனமுடைந்த வள்ளி துத்திப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், மாதனூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரிகளிடம் வள்ளி கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது, ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனாளிக்கே தெரியாமல் அவரது பெயரில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.