மதுரை: பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர், தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்தது பழனி செட்டிபட்டி காவல்துறை. இதனால் சவுக்கு சங்கருக்கு ஜூலை 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டிப்பதாக மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, இன்று மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வருகிற ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, யூடியுபர் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, சிறையில் சவுக்கு சங்கருக்கு நடைபெறும் கொடுமைகளை கண்டிப்பதாக தெரிவித்தார். புழல் சிறையில் உள்ள யூடியுபர் சவுக்கு சங்கர், கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்ததாகவும், ஆனால் உண்ணாவிரதத்தை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி முடிக்க வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் வழக்கறிஞர் கூறுகையில், கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கரை சிறை விதிகளை மீறி 24 மணி நேரமும் காவலரை வைத்து சிறையில் கண்காணித்து வருவதாகவும், சவுக்கு சங்கரின் கையில் இருந்த காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவச் சான்று இல்லை எனக் கூறி புழல் சிறை நிர்வாகம் மருத்துவ சிகிச்சையை மறுப்பதாகவும் தெரிவித்தார்.
சவுக்கு சங்கர் மீதான வழக்கை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் வழக்காக நடத்தி வருவதாகவும், ஆனால் சிறையில் தொடர்ந்து கொடுமைகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் சிறையில் சவுக்கு சங்கர் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை புழல் சிறை கேண்டீனை மீண்டும் திறக்க உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்!