கோவை: பெண் காவலர்கள் உள்பட தமிழ்நாடு காவல்துறையினர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சவுக்கு சங்கரை சிறைக்காவலர்கள் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதாக குற்றம்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், சிறையில் சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த சூழலில், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்ததன் அடிப்படையில், மாவட்ட சட்ட உதவி மையம் சார்பில் வழக்கறிஞர்கள், இரு மருத்துவர்கள் சிறையில் சவுக்கு சங்கரை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அங்கு என்ன நடந்தது என்பது குறித்த அறிக்கையை மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர்.
சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை என்று சிறைத் துறை அறிக்கை கொடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கோவையில் சவுக்கு சங்கரை கைது செய்தபோது கொடுக்கப்பட்ட குறிபாணையில் அவர் கையெழுத்துப் போட்டுள்ளார்.
ஆனால், தேனி மாவட்ட போலீசார் கைது செய்தபோது சவுக்கு சங்கர் தனது விரல் ரேகையினை மட்டுமே வைத்திருக்கிறார். சனிக்கிழமை நீதிபதி முன்பு கையெழுத்து போட முடிந்தவரால், சிறையில் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்துப் போட முடியாத நிலைதான் இருக்கிறது. அதனால்தான் அவர் கை பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறோம். சிறைத்துறை அதை சாதாரண வீக்கம் என்று நம்புகின்றது.
இந்த நிலையில், சவுக்கு சங்கரை தங்களது கட்டுப்பாட்டில் எடுக்க மனு செய்திருந்த போலீசார், நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தவில்லை. எக்ஸ்ரே எடுக்க நேர்ந்தால் சிக்கிக் கொள்வோம் என்பதாலேயே சிறைத் துறையினர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.
சட்ட உதவி மையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையை நீதிமன்றத்தில் கேட்க உள்ளோம். அதன் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சட்டரீதியாகக் கேட்க இருக்கிறோம். வழக்கறிஞராக எனக்குத் தெரிந்தவரை, சட்ட உதவி மையத்தின் அறிக்கை சிறைத் துறைக்கு எதிராகத்தான் இருக்க முடியும் என்று கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீது புதிதாக வழக்குப்பதிவு.. சென்னை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!