சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தமிழகத்தில் தற்போது வரை 4.36 கோடி பூத் சிலீப் வழங்கப்பட்டுள்ளது. 13ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
புதிய வாக்காளர்களுக்கு இந்த முறை 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இன்னும் 6000 அட்டைகள் மட்டுமே வழங்க வேண்டி உள்ளது. விரைவில் இதுவும் வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது வரை வருமானத் துறையினர் ரூ.74 கோடி பறிமுதல் செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் புத்தகத்தில் உள்ள சின்னத்தின் வரைபடத்தின் அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், உதவி செலவின பார்வையாளர் அனுப்பி வைத்த புகார் இதுவரை எங்களிடம் வரவில்லை. செய்தித்தாள்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேரும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இருக்கும்.
தபால் வாக்குகள் அளிக்கும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருச்சியில் மாநில அளவிலான ஒருங்கிணைந்த தபால் வாக்கு மையம் அமைக்கப்படும். அங்கிருந்து தபால் வாக்குகள் பல்வேறு மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்படும்.
பழைய முறையின் படி, சென்னையில் பணிபுரியும் ஒருவரின் வாக்கு கன்னியாகுமரியில் இருந்தால் சென்னையிலிருந்து ஒரு அதிகாரி கன்னியாகுமரிக்குச் சென்று அந்த தபால் வாக்குச் சீட்டுகளை அளித்துவிட்டு வருவார். தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்தும் ஒருங்கிணைந்த மையமான திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மகளிர் உரிமை தொகை அளிக்க எந்தவித தடையும் இல்லை. தொடர்ச்சியாகச் செயல்படுத்தி வரும் திட்டங்களைத் தொடரலாம் என்று தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளது.
இதற்குத் தேர்தல் ஆணையத்திடம் எந்தவித அனுமதி பெறத் தேவையில்லை. பெரும்பாக்கம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளோம். வேலூரில் ஜி-பே ஸ்கேன் பன்னுங்க ஸ்கேம் பாருங்க போஸ்டர் தொடர்பாக புகார்கள் எங்களுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்துவோம். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்த தபால் வாக்குச் சீட்டை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! - Madurai Meenakshi Amman Temple