கோயம்புத்தூர்: கடந்த 2017ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக, சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலமாக, இந்த வழக்கு மீதான விசாரணை சிபிசிஐடி அதிகாரிகளால் தீவிரப்படுத்தப்பட்டு, அடிக்கடி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், எட்டாவது குற்றம் சாட்டப்பட்ட நபரான, கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ் சுவாமி என்பவர், இன்று (மார்ச் 26) கோவையில் சிபிசிஐடி அதிகாரிகள் முன் விசாரணைக்காக ஆஜரானார்.
திருச்சூரில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக பணியாற்றும் சந்தோஷ் சுவாமிதான், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு ஆட்கள் மற்றும் வாகனம் ஆகியவற்றை ஏற்பாடு செய்தவர் என கூறப்படுகிறது. கடந்த மாதம் மனோஜ் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இன்று (மார்ச் 26) சந்தோஷ் சாமியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.