தென்காசி: சென்னை செல்வதற்காக சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த இளைஞரை அரிவாள் வெட்டிய நபரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசராணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசாரணையில், தென்காசி, வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (23). சென்னையில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், தென்காசியில் இருந்து சென்னை செல்வதற்காக, சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு நேற்று (டிசம்பர் 9) திங்கட்கிழமை இரவு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்வராஜை அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதில், அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் டவுன் காவல்துறையினர், செல்வராஜை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், செல்வராஜுக்கு வாயில் அரிவாள் வெட்டுப்பட்டுள்ளதால் அவர் பேசுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பகிறது.
ரயில்வே போலீசார் விசாரணை:
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார், செல்வராஜை யார் வெட்டினார்கள்? கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பது குறித்து சார்பு துணை ஆய்வாளர் (RPF) வெள்ளத்துரை மற்றும் ரயில்வே போலீஸ் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சமாதானம் ஆகியோர் நேற்று இரவு முதல் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: பல்லடம் மூவர் படுகொலை வழக்கு: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர அதிமுக எம்.எல்.ஏ கடிதம்..
இந்நிலையில், இன்று (டிசம்பர் 10) செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில், செல்வராஜ் அரிவாளில் வெட்டிய வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த சூர்ய கண்ணன் (23) என்பவரை சங்கரன் கோவில் நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
10க்கும் மேற்பட்ட வழக்குகள்:
விசாரணையில், ஒரு பெண்ணை செல்வராஜ் மற்றும் சூர்ய கண்ணன் என இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால், இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகறாரின் காரணமாக சூர்ய கண்ணன் செல்வராஜை அரிவாளால் வெட்டியுள்ளார். தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட சூரிய கண்ணன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், அவர் தொலைப்பேசியைக் கொண்டு சோதனை மேற்கொண்டதில், இவர் பல்வேறு பெண்களிடம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கைது செய்த சூர்ய கண்ணனை சங்கரன் கோவில் நகர கவல்நிலைய போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.