சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா தலைச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட கெடக்காடு கிராமத்தில் சுமார் 55 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்ல போதுமான சாலை வசதி கிடையாது.மேலும் அங்கு உள்ள மண் சாலையும் கற்கள் நிறைந்து கரடு முரடாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே சிரமமாக உள்ளது.
அதுவும் மழைக்காலங்களில் அதன் நிலைமை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சேரும் சகதிமாக காட்சி அளிக்கும் எனவே கிராம மக்கள் அவசர காலங்களில் மருத்துமனைக்கு செல்வதற்கு கூட தினமும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்கக் கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பல முறை மனுக்கள் கொடுத்தும் இந்த கிராமத்துக்கு சாலை வசதி செய்து தர முன்வரவில்லை.
ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக இருப்பது சாலை வசதி செய்து தரப்படும் என்பதுதான். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிடக்காடு கிராமத்தில் வீடுகள் தெருக்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சாலை வசதி அமைத்து தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்து பேனர் வைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தால் மலைக் கிராமப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கிராமத்தில் உள்ள கரடு முரடான மண் சாலை இருப்பதால் உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் கூட போர்வையில் கட்டி சிறிது தூரம் தூக்கிக் கொண்டு சென்ற பின்புதான் அதன் பிறகு ஆம்புலன்ஸ் ஏற்ற முடிகிறது. சாலை வசதி இல்லாத காரணத்தால் மலை கிராம மக்களின் கல்வி, மருத்துவம், அடிப்படைத் தேவைகள் எல்லாமே கேள்விக்குறியாக உள்ளது?.
இது குறித்து கெடக்காடு கிராம மக்கள் கூறுகையில்,"நாங்கள் செல்லாத அரசு அலுவலகம் கிடையாது. நடத்தாத போராட்டமும் கிடையாது ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. எனவே நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்த பகுதியில் இருந்து ஒருவர் கூட வாக்களிக்க மாட்டோம்" என தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று கெடக்காடு கிராமத்தின் பக்கத்து கிராமமான செந்திட்டு கிராமத்திலும் சாலை வசதிக்காக தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்து கிராம மக்கள் கொடிகட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்தில் கொண்டாவது ஏற்காட்டில் உள்ள கிராம மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா? தமிழக அரசு என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
100% வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே ஏற்காடு மலைப்பகுதியில் அடுத்தடுத்த மலை கிராமங்கள் அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை என்று தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "ஓட்டு போடுவதற்காவது வண்டி அனுப்புங்க".. தேர்தல் பிரச்சாரத்தையே அறியாத திருநெல்வேலி காணி பழங்குடியினர்!