சேலம்: மலேசியாவில் ரூ.1.20 லட்சத்திற்கு விற்கப்பட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பெண், அதிகாரிகள் மற்றும் போலீசாரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டார். அவருக்கு சேலத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து, அவர் சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் தன்னை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (45). இவரை திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலி, சென்னையைச் சேர்ந்த முத்து ஆகியோர் மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாகக் கூறி அங்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு சரியான வேலை கிடைக்காத நிலையில், வீட்டு வேலை செய்யச் சொல்லி மகேஸ்வரியைத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், இந்திய மதிப்பில் ரூ.1.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இது குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவரது உறவினர்கள் அம்பேத்கர் மக்கள் கட்சி நிர்வாகிகளின் உதவியோடு, சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில், மகேஸ்வரியை மீட்டுத்தர வேண்டுமென்று புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து, அதிகாரிகள் மற்றும் போலீசார் மகேஸ்வரியை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து, காவல்துறை நடவடிக்கைக்குப் பயந்து மகேஸ்வரியை அடைத்து வைத்திருந்த நபர்கள் தங்களது செந்த செலவில் நேற்று விமான மூலம் தமிழகம் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மகேஸ்வரி கூறுகையில், ”வீட்டு வேலை என்று சொல்லி முகமது மற்றும் முத்து என்ற இருவர் என்னை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு என்னை விற்று விட்டனர். பின்னர், கடுமையான வேலைகள் கொடுத்து, வீட்டின் உரிமையாளர்கள் என்னை துன்புறுத்தினர். உடலெங்கும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து என்னுடைய சகோதரரிடம் கூறினேன். அவர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினரைத் தொடர்பு கொண்டு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வைத்தார்.
இந்த உதவியை எப்போதும் நான் மறக்க மாட்டேன். ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளி வந்ததால், வீட்டின் உரிமையாளரும், ஏஜெண்டுகளும் பயந்துபோய் என்னை அவர்களது செலவிலேயே விமான மூலம் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். என்னைப்போல் யாரும் போலி ஏஜெண்டுகளை நம்பி ஏமாந்து, வெளிநாடுகளுக்கு வேலைக்குப் பெண்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் அண்ணாதுரை கூறுகையில், “மகேஸ்வரி மட்டுமல்ல, இந்த போலி ஏஜென்ட்கள் மூலம் மலேசியாவில் பல்வேறு இடங்களில் 15 தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள், வீட்டு வேலைக்கு என்று அனுப்பப்பட்டு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இவர்களையும் மீட்டு தமிழக அரசு உதவிட வேண்டும். மேலும் மகேஸ்வரி போன்ற ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய வேலை வாய்ப்பும், இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கிட வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏஜெண்டுகளின் ஏமாற்று வேலை? மலேசியாவில் விற்கப்பட்ட தமிழகப் பெண்.. கதறும் குடும்பத்தினர்!