சேலம்: சேலம் மாவட்டம் மாமாங்கம் அருகே அமைந்துள்ளது செயில் நிறுவனத்தின் 'சேலம் இரும்பாலை'. இங்குள்ள 3 அலகுகளில் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் என 600 மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சேலத்தின் அடையாளமாக விளங்கி வரும் இந்த ஆலை, நஷ்டத்தில் செயல்படுவதாக கூறி இதனை மூடும் முயற்சிகள் நடைபெற்றது.
ஆனால் தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் ஊதிய உயர்வு, போனஸ் திட்டத்தை உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறி, தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சேலம் இரும்பாலையில் சுமார் 1500 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புலிமேடு அருவியில் ஆபத்தை உணராமல் சாகசம் செய்யும் சிறுவர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
இது தொடர்பாக பாரதிய மஸ்தூர் சங்கம் தலைவர் வீரமணி கூறுகையில், "ஊழியர்களுகு வழங்க வேண்டிய 39 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வீட்டு வாடகைப்படி, கூடுதல் இன்க்ரீமண்ட், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பணிக்கொடை திட்டம், 2007 ல் இருந்து திருத்தப்படாத ஊக்க ஊதிய திட்டம், பணியிடை மற்றும் பணி மாறுதலுக்கு உட்பட்ட தொழிலாளர்களின் ஆணையினை ரத்து செய்வது, போனஸ் திட்டத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த 14 அம்ச கோரிக்கைகள் நீண்ட ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.இதனால் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே தொழிலாளர்களின் கோரிக்கைகளை செயில் நிர்வாகம் விரைந்து நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என தெரிவித்தார்.