சேலம்: சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜன.24) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாகல்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அந்த பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி ராஜ் என்பவர் அவரின் ஆதரவாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட நபர்களுடன் பள்ளிக்கு வந்து சட்டமன்ற உறுப்பினர் அருள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அருள் சைக்கிள் வழங்கக் கூடாது எனவும் திமுகவினர் தான் மாணவ மாணவிகளுக்குச் சைக்கிளை வழங்குவோம் என்று திமுகவினர் கூறிய நிலையில் அனைவரும் தலைமை தாங்கி வழங்கலாம் என்று பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளார்.
இதற்கு திமுக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மேலும் வாக்குவாதம் முற்றிப் போன நிலையில் பாமக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அந்த பகுதியில் அதிகளவில் குவிந்ததால் திமுகவினர் கலைந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், ‘கண்ணு உங்கள் காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் அரசியல் செய்ய விரும்ப வில்லை, நல்ல ஒழுக்கத்தைக் கத்துக் கொடுக்க வேண்டிய இடத்தில் உங்களை அசிங்கப்படுத்திவிட்டார்கள். கட்சிக்காரனாக நான் இங்குப் பேசவில்லை, உங்கள் அசிங்கப்படுத்தின அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து நான் மீண்டும் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி மாணவ மாணவிகள் மத்தியில் சட்டமன்ற உறுப்பினர் அருள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வடலூர் வள்ளலார் தர்மசாலைக்கு, 10 டன் காய்கறி உட்பட ஏராளாமான பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்..!