சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் பெண் பட்டியலின பேராசிரியைக்கு துறைத்தலைவர் பதவி வழங்க மறுத்ததாக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் கல்வியியல் துறையில் தகுதிவாய்ந்த பேராசிரியை இருக்கும் நிலையில், அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு, துறைக்கு சம்பந்தமில்லாத ஒருவர் துறைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓரிரு நாளில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யவுள்ள துணைவேந்தர் ஜெகநாதனின் இந்த தலித் விரோத போக்கிற்கு, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் துறைகளுக்கான துறைத்தலைவர் பதவி பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. கல்வியியல் துறையில் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராக இருந்த முனைவர் நாச்சிமுத்து பணி ஓய்வு பெற்ற நிலையில், அத்துறையில் அடுத்த மூத்த பேராசிரியரான தனலட்சுமி துறைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், துணைவேந்தர் தனது உறவினரான தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி என்பவரை கல்வியியல் துறைத்தலைவர் பொறுப்பில் அமர்த்தினார். அது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. துறைசார்ந்த புரிதல் இல்லாத பெரியசாமி, கல்வியியல் துறையை அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றார். தற்போது அவர் துறைத்தலைவர் பொறுப்பிலிருந்து தானாக விலகுவதாக அறிவித்ததால் உறுப்புக் கல்லூரியில் முதல்வராக இருந்து சட்ட விரோதமாக பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ள முனைவர் வெங்கடேஸ்வரன் என்பவருக்கு துறைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அறிகிறோம்.
பல்கலைக்கழகத்தில் சட்டவிரோதமாக பணி மாறுதல் பெற்று சம்பளம் பெற்று வரும் அவரின் பணியே விதிகளுக்குப் புறம்பானது. இந்நிலையில், அவருக்கு கல்வியியல் துறைத்தலைவர் பொறுப்பு என்பது முழுக்க முழுக்க அப்பட்டமான விதிமீறலாகும். கல்வியியல் துறையில் தகுதியான சீனியர் பேராசிரியர் இருக்கும் நிலையில், அவர் பட்டியலினம் என்பதனால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
துணைவேந்தர் ஜெகநாதனின் இந்த பட்டியலின விரோதப்போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது. கல்வியியல் துறைத்தலைவர் பொறுப்பிலிருந்து வெங்கடேஸ்வரனை உடனடியாக விடுவிக்கப்பட்டு, பேராசிரியர் தனலட்சுமிக்கு துறைத்தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். மேலும் உறுப்புக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர்களை பல்கலைக் கழகத்திற்கு மாற்றியதால் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் பணியிடம் பல்கலைக்கழகத்தில் இல்லை. மேலும் உறுப்புக் கல்லூரிகளிலும் முதல்வர் பணி நேரடி நியமனம் கிடையாது. பணி மூப்பு அடிப்படையில் தான் முதல்வர் பணி வழங்கப் பட வேண்டும் என்பதால் அரசு முதல்வர் பணியினை ஏற்காது. எனவே பல்கலைக்கழக நிதி இழப்பில் இருந்து பாதுகாக்க உறுப்புக் கல்லூரி முதல்வர்களை உடனடியாக பல்கலைக்கழகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என பூட்டா தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்தனர்.
முன்னதாக, சேலம் பெரியால் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுக்கு மேலும் ஒராண்டு பதவி நீட்டிப்பு செய்து தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரூரில் உரிமம் இன்றி செயல்படும் பார்கள்.. "எந்த தேதியில் மூடப்பட்டன?" - நீதிபதிகள் சரமாரி கேள்வி! - Without License Bars Issue