சேலம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரி விடுதி உணவை அருந்திய 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் இரா கதிரவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்காரவேல் ரமேஷ் ஆகிய குழுவினர் கல்லூரி விடுதியின் உணவு கூடத்தை இன்று ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில், உணவுகளில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் கூறுகையில், அந்தக் கல்லூரி நிர்வாகம் அங்கு நடத்தப்படும் விடுதிக்கு உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெறவில்லை. அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.
![நர்சிங் கல்லூரியில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-05-2024/21570709_slm.jpg)
மேலும், விடுதியின் சமையல் கூடம் போதுமான இட வசதி கொண்டதாக அமையவில்லை எனவும் சுகாதாரமாகவும் காணப்படவில்லை எனவும் அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சாக்கடை நீர் கலந்த நிலையில் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இக்குறைபாடுகளை சுட்டிக்காட்டி கல்லூரி வளாகத்திற்கு தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விடுதியில் உள்ள சமையல் கூடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நோட்டீசில் கண்டறியப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த செய்த பின்னர் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்று மீண்டும் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உணவு கூடத்தில் இருந்து ஏழு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது அதில் இரண்டு தண்ணீர் மாதிரிகளின் ஆய்வறிக்கை பெறப்பட்ட பின்னர் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி மேல் நடவடிக்கை தொடரப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.