சேலம்: சேலம் திருமணிமுத்தாறு, ராஜ வாய்க்கால், கொண்டலாம்பட்டியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதுவரை ராஜ வாய்க்கால் கரையோரங்களில் உள்ள இடத்தை மயானமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சேலம் மாநகராட்சி நிர்வாகம் இங்கு கழிவுநீர் தொட்டி கட்டப் போவதாகப் பதாகைகள் அமைத்து, அதற்கான முதற்கட்ட பணியைத் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பாக இந்த பகுதி நீர் ஆதாரத்துக்குச் சம்பந்தப்பட்டதால் இங்கு எந்த ஒரு கட்டுமானங்களும் கட்ட அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பொதுமக்கள் மற்றும் சேலம் விவசாயிகள் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், "ராஜ வாய்க்கால் நீர் நிலை பகுதிகளில் கழிவுநீர் தொட்டிக் கட்டும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "ராஜ வாய்க்கால் நீரோடை பகுதியில் மயானம் அமைக்க வேறு எந்த இடமும் இல்லை என்பதால் தான் இந்த இடத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு கழிவுநீர் தொட்டி கட்டுவதால் நீரோடை பாதிக்கப்படும்" என கூறினார்.
இதையும் படிங்க:உங்களுக்கான அடிப்படை உரிமைகள் என்னென்ன தெரியுமா? சட்டம் சொல்லும் சமநீதி.!