சேலம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் தபால் வாக்கு பதிவு செய்வதற்கான இன்றும், நாளையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க வசதியாக சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், சேலம் மாநகர காவல்துறையில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயிரத்து 875 காவல் துறையினர் சேலம், குகை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சேலம் ஊரக காவல் துறையில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இரண்டாயிரத்து 335 காவல் துறையினர் சேலம் அரசு கலைக் கல்லூரியிலும் என மொத்தம் நான்காயிறத்து 210 காவல் துறையினர் தபால் வாக்கு செலுத்தும் வகையில் சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தபால் வாக்குப்பதிவு நடைபெறும் பணிகளை வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பார்வையிடும் வகையிலும், வாக்குப்பதிவு நடைமுறைகளை வீடியோ ஒளிப்பதிவு செய்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், 11.04.2024 மற்றும் 12.04.2024 ஆகிய இரண்டு நாட்களில் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்த இயலாத காவல்துறையினர் வரும் 15.04.2024 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்படும் தபால் வாக்குப் பெட்டியில் தங்களது வாக்கினைச் செலுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பிருந்தாதேவி ஆய்வு செய்தார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், தனித் துணை ஆட்சியர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர்கள் கேசவன், தாமோதரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்.. அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்ட சேலம் ஆட்சியர்!